Friday, 9 August 2013

வரகு அரிசி சமையல்


சத்துக்கள்


வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகு,  பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம்.
இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி  இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.




வரகு அரிசி கஞ்சி


சுத்தம் செய்த கால் கப் வரகு அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் வேகவிடவும்.  பாதி வெந்ததும், உரித்த 10 பூண்டுப் பற்கள், ஒரு துண்டு சுக்கு, கால் டீஸ்பூன் சீரகம், வெந்தயம், ஒரு டம்ளர் பால் சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்த‌தும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும்.
தொட்டுக்கொள்ள
கறிவேப்பிலையைக் கழுவி உதிர்த்து, சிறிது உளுந்து, ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைக்கவும். இந்த‌த்  துவையலுடன் சேர்த்துச் சாப்பிட அற்புதமாக இருக்கும்.




வெஜிடபிள் வரகு கஞ்சி
தேவையானவை:
வரகு அரிசி - ஒரு கப், முட்டைகோஸ் - கால் கிலோ, முள்ளங்கி, தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், எலுமிச்சம்பழம் - தலா ஒன்று, அரிசி மாவு  - ஒரு டீஸ்பூன் இஞ்சித் துருவல் - சிறிதளவு, கொத்தமல்லி - அரை கட்டு, புதினா - கால் கட்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், பூண்டு பல் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் வரகு அரிசியுடன் மூன்று கப் தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, இஞ்சித் துருவல், நறுக்கிய பூண்டு, கீறிய  பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து நன்கு வறுக்கவும். முட்டைகோஸ், முள்ளங்கியை துருவி, இதனுடன் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி... ஒரு லிட்டர் தண்ணீர், தேவையான உப்பு சேர்க்கவும். மிகவும் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி இலை, புதினா இலை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து இறக்கவும். வெந்த வரகு அரிசியுடன், இதனை சேர்த்து நன்கு கலக்கினால்... வெயிலுக்கு இதமான, மிகவும் ருசியான, சத்தான வெஜிடபிள் வரகு கஞ்சி தயார். இதற்கு தொட்டுக் கொள்ள, கொள்ளுத் துவையல் சிறந்தது.



வரகு இனிப்பு பணியாரம் :

தேவையான பொருட்கள்:

வரகு -200கிராம்
வெள்ளை உளுந்து -50 கிராம்
தேங்காய் -1 கப் [துருவியது]
பூவன்பழம் -1
வெல்லம் -150கிராம்
ஏலக்காய் -3-5
எண்ணெய் -தேவையான அளவு



செய்முறை:

வரகையும் உளுந்தையும் 1/2 ம்ணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு மேலே கொடுக்கப் பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் போட்டு வழவழப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

இருப்புச்சட்டியில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டில் மாவை எடுத்து ஊற்றவும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி விடவும்.வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டியது தான்.அதிக எண்ணெய்யை விரும்பாதவர்கள் குழிப்பணியாரமாக ஊற்றி சாப்பிடலாம்.

 
வரகு கார அப்பம்:

தேவையான பொருட்கள்:



வரகு -200 கிராம்
உளுந்து -50 கிராம்
தேங்காய் – 1 கப்
இஞ்சி- 1துண்டு
பச்சை மிளகாய் -தேவையான அளவு
சின்ன வெங்காயம்- 15 [பொடியாக நறுக்கியது]
புளித்த மோர் -தேவையான அளவு
உப்பு -தேவையான அளவு.




செய்முறை:

வரகு மற்றும் உளுந்துடன் இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்தெடுக்கவும்.

இருப்பு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி மாவில் கொட்டவும்.பிறகு குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையான சத்தான வரகு குழிப்பணியாரம் ரெடி.மிளகாய் துவையலுடன் சாப்பிட்டால் சுவை தூக்கலாக இருக்கும்.




 



No comments:

Post a Comment